SJK(T) NATESA PILLAI - 5 மாணவர்கள் அனைத்துலகப் போட்டிக்குச் செல்கின்றனர்
கீழ்ப்பேரா மாவட்டம், நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 5 பேர் எதிர்வரும் 24.10.2019 முதல் 27.10.2019ஆம் நாள் வரை இந்தோனீசியாவில் நடைபெறவுள்ள கணிதம் மற்றும் அறிவியல் அனைத்துலக நிலை புதிர்ப் போட்டியில் பங்கேற்பதற்குத் தகுதிபெற்று புறப்படுகின்றனர்.
இந்த மாணவர்கள் மலேசியாவில் நடந்த தேசிய நிலை கணிதப் புதிர் போட்டியில் 2 தங்கம் 3 வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய நிலை கணிதம் மற்றும் அறிவியல் புதிர் போட்டி 2019க்கான பரிசளிப்பு விழா 19.10.2019ஆம் நாள் கோலாலம்பூரில் உள்ள சுன் குவோக் சீனப்பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பரிசு மற்றும் நற்சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.
மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன் உயர்நிலைச் சிந்தனைத் திறன் புத்தாக்க மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போட்டியில் நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மலேசியாவின் நிகராளியாக அனைத்துலகப் போட்டிக்குத் தேர்வாகி இருப்பது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
இந்தோனீசியாவில் நடைபெறவுள்ள கணிதம் மற்றும் அறிவியல் அனைத்துலக நிலை புதிர்ப் போட்டியில் பங்கேற்கும் நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த வெற்றியைப் பதிவு செய்து திரும்புவார்கள் என மிகவும் நம்புவதாக நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.குமுதா அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நன்று, வாழ்த்துகள்
ReplyDelete