THAILAND INVENTOR'S 2020 - மலேசிய ஆசிரியர்களின் அருந்தகை தமிழ்ச் செயலி வெளியீடு
பாங்காக்,
தாய்லாந்து நாட்டில் நடைபெறும் அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் பேரா,
மஞ்சோங் மாவட்ட கல்வி அலுவலகமும் கொலம்பியாக் கிராமத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும்
கலந்து கொள்கின்றனர். இப்போட்டி 2 முதல் 6 பிப்ரவரி 2020 வரை நடைபெறுகிறது.
இப்போட்டிக்கு
மஞ்சோங் மாவட்ட கல்வி அலுவலகத்தின் அதிகாரிகளும் கொலம்பியா கிராமத்
தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்களும் அருந்தகை வாசிப்பு செயலி எனும் செயலியை
வடிவமைத்துப் போட்டியில் அறிமுகம் செய்கின்றனர்.
மலேசியத் தமிழ் ஆசிரியத்தின் மேன்மையைப் பறைசாற்றும் வகையில் இந்த மாபெரும் சாதனைச் செயலியை உருவாக்கியுள்ள புத்தாக்க ஆசிரியர்களின் விவரம் பின்வருமாறு:-
1.
முனைவர் தனேசு பாலகிருட்டிணன் (கல்வியியல்
தொழில்நுட்ப அதிகாரி )
2. திருமதி பரிமளா வடிவேலு (மஞ்சோங் மாவட்ட கல்வி அலுவலகம்,
உதவி அதிகாரி)
3. திருமதி புஷ்பராதா பெருமாள் (கொலம்பியாக் கிராமத்
தமிழ்ப்பள்ளி, தலைமையாசிரியர்)
4. திரு.கலைச்செல்வன் மோகன் (கொலம்பியாக கிராமத்
தமிழ்ப்பள்ளி, துணைத் தலைமையாசிரியர்)
நம் நாட்டின்
முன்னாள் கல்வி அமைச்சர் மாண்புமிகு டாக்டர் மஸ்லி மாலிக் அவர்களால் அறிமுகப்படுத்திய
வாசிப்புத் திட்டத்தை மேலும் மிளிர வைப்பதற்காகவும் மாணவர்களிடையே வாசிக்கும்
ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காகவும் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலியில்
தமிழ்மொழி, ஆங்கிலம், மலாய்மொழி போன்ற கதைகளும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
மக்கள் கல்வி கற்ற சமூகமாக திகழ
வேண்டும் என்பதற்காக மலேசிய கல்வி அமைச்சு
வாசிப்புத் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. முறையான ஒரு
திட்டத்தின் வழி மலேசிய மக்கள் வாசிப்புப் பழக்கத்தைக் கையாள வேண்டும்
என்பதற்காக அருந்தகை எனப்படும் ஒரு
வாசிப்புத் திட்டம் பள்ளிகளில்
அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாசிப்புப் பழக்கத்தை மேலும் விரிவுப் படுத்த
அருந்தகை செயலி உருவாக்கப்பட்டது.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினர் அனைவரும் பங்கு கொண்டு பயனடைய வேண்டும்
என்பதே முக்கிய நோக்கமாகும். வாழ்நாள் முழுவதும் கற்கும் சமுதாயமாக திகழ வேண்டுமாயின்
வாசிப்புப் பனுவல்களை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருத்தல் சிறப்பாகும்.
வாசிப்புப் பனுவல்கள் புத்தகங்களாகவோ அல்லது வேறு எந்த வடிவத்திலும் இருக்கலாம்
என்பதற்கு அருந்தகை ஒரு நல்ல சான்றாகும்.
இந்நவீன காலத்தில் புத்தகங்களைத் தேடி
படிப்பது பலருக்கு சுமையாக இருப்பதனால், இந்த அருந்தகை செயலியைப்
பயன்படுத்தி தேவையான வாசிப்புப் பனுவல்களைத் தேர்தெடுத்து வாசித்து பயனடையலாம்.
மேலும் வாசிப்பதோடு மட்டுமல்லாது அதனையொட்டிய கருத்துகளையும் மற்றவர்களோடு
பகிர்ந்து கொள்ளவும் வகை செய்கிறது. மாணவர்களின் சிறந்த படைப்புகளை ஆசிரியர்கள்
தேர்தெடுத்துத் திருத்தி அருந்தகை செயலிக்கும் அனுப்பி வைக்கலாம். கால
மாற்றத்திற்கு ஏற்றவாறு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாசிப்பது
சிறப்பாகும்.
இப்போட்டிக்குப் பல
முயற்சிகளும் திட்டங்களையும் வகுத்தவர் முனைவர் தனேசு பாலகிருட்டிணன் ஆவார்.
அதுமட்டுமின்றி, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் அனைத்துலக அளவில் மிளிர வேண்டும் என்ற
முயற்சியில் இறங்கி வெற்றியும் கண்டவர். இவருக்குத் துணையாக கொலம்பியா கிராமப்
பள்ளியின் ஆசிரியர்களும் துணைநின்று பங்காற்றினர். இவர்களின் கூட்டுச் சிந்தனையில் உருவாக்கப்பட்டதுதான் 'பாவாணம் குழு'.
இந்தக்
குழுவினர், கடந்த 2019இல் தெமெங்கோங் இபுராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற
தேசிய அளவிலான கல்வியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப புத்தாக்கப்போட்டியிலும் மின் நாள் பாடத்தினைத்
தமிழ்ப்பள்ளிக்காக வடிவைமைத்து வெள்ளிப் பதகத்தையும் வென்று சாதனைப் படைத்தனர்.
இக்குழுவின் கனவு
மீண்டும் புது முயற்சியில் அருந்தகை வாசிப்புச் செயலி வழி
மலர்ந்துள்ளது. இம்முறையும் இவர்களின் முயற்சி ஈடேர வேண்டும் என்பதே இவர்களின்
பெரும் எதிர்பார்பு எனலாம். "வெள்ளி மாநிலம்; வெற்றி மாநிலம்" எனும் முழக்கத்தை மெய்ப்பிக்கும் வகையில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 'பாவாணம் ஆசிரியர் குழுவினரின்' இந்த அருந்தகை செயலி உருவாக்கம் மலேசிய நாட்டிற்கு அனைத்துலக அரங்கத்தில் பெருமை ஈட்டித்தரும் ஒரு சாதனையாகக் கொள்ளலாம்.
Comments
Post a Comment