SJK(T) SAINT MARY'S - கருப்பொருள் அடிப்படையில் 21ஆம் நூற்றாண்டு வகுப்பறை உருமாற்றம்
பேரா, கிரியான் மாவட்டம், செயிண்மேரி
தமிழ்ப்பள்ளியின் வகுப்பறை உருமாற்றத் திட்டத்தினைப் பேரா மாநிலக் கல்வி இயக்குநர் டாக்டர்
முகமது சுகைமி பின் முகமது அலி அவர்கள் அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்து, 12 கருப்பொருள் வகுப்பறைகளைத் திறந்துவைத்தார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjt4yi-OQH9ZKp4-KX-xMI6tJFC9dp9mQb08YOizl038ill3LSFfymAXn9jxOdZr33wxj_5WmCvU64sXRyc91luJ853AYcQaOpakvvETkJ8swb06trTD5bAbSzOjgZvlBUCQr1UFqTiYeo/s640/IMG-20200218-WA0010.jpg)
இந்தத் திட்டத்தின்கீழ் இப்பள்ளியில் உள்ள 12 வகுப்பறைகள்
ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் (THEME CLASSROOM) அழகாகவும் நேர்த்தியாகவும் உருமாற்றம் கண்டுள்ளன. மேலும், 21ஆம் நூற்றாண்டு வகுப்பறைக்கான கூறுகள் அனைத்தும் கூடவே இடம்பெற்றுள்ளன. பேரா மாநிலத்தில் இந்த வகையில் உருமாற்றம் கண்டுள்ள முதலாவது பள்ளியாகச் செயிண்மேரி தமிழ்ப்பள்ளி சிறப்புப் பெற்றுள்ளது. தேசிய, சீன, இடைநிலைப் பள்ளிகளில்கூட இம்மாதிரியான உருமாற்றம் இதுவரையில் நிகழாத சூழலில் ஒரு தமிழ்ப்பள்ளி மாபெரும் சாதனை படைத்துள்ளது எனலாம்.
மாணவர்களின் கற்றல் சூழலை மிகவும் உற்சாகப்படுத்துவதுடன்
மாணவர்களின் முழு வருகைக்கும் இந்த வகுப்பறை உருமாற்றம் மிகவும் உதவுவதாகப் பள்ளியின்
தலைமையாசிரியர் திரு.இரா.சுப்பிரமணியம் தெரிவித்தார். அதோடு, இந்தத் திட்டத்திற்குச் சிறப்பான உதவிகள்
நல்கிய ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெ,ஆ,சங்கம் ஆகிய அனைவருக்கும் நன்றி கூறினார்.
தாவரங்களும் விலங்கினங்களும் [FLORA & FAUNA], விவசாயம் [PERTANIAN], அறிவியல் [SAINS], விளையாட்டு [SUKAN], வானியல் [ASTRONOMI], தொழில்நுட்பம் [TEKNOLOGI] ஆகிய 6 கருப்பொருள்களில்
12 வகுப்புகளும் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வகுப்பறையும் மாணவர்களுக்குப் பல தகவல்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.
மாணவர்கள் உற்சாகமாகக் கற்றலில் ஈடுபடுவதற்கும் தங்கள் வகுப்பறையை நேசிப்பதற்கும் இத்திட்டம்
உதவும். இவ்வாறான வகுப்பறையை இந்தப் பள்ளியில்தான் முதன்முறையாகக் காண்கிறேன். இதுவொரு
மிகச் சிறப்பான; புதுமையான; முன்னோக்கிய திட்டமாகும் என்று கல்வி
இயக்குநர் புகழாரம் சூட்டினார். மேலும், மாணவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடியதோடு மாணவர்களின் விளக்கங்களையும் ஆர்வத்தோடு செவிமடுத்தார்.
வகுப்பறைகளை உருமாற்றம் செய்த வகுப்பாசிரியர்கள், பெற்றோர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் கல்வி இயக்குநர்
நற்சான்றிதழ் வழங்கினார். கல்வி இயக்குநரோடு கிரியான் மாவட்டக் கல்வித் தலைமை அதிகாரி
ஹாஜா செப்பியா, பேரா மாநிலத்
தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் சுப.சற்குணன் மற்றும் மாநில, மாவட்டக் கல்வி அதிகாரிகள், பெ,ஆ,சங்கச் செயற்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment