பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் அனைத்துலகத் தாய்மொழி நாள் விழா
காணொலி இணைப்பு ⏭
அனைத்துலத் தாய்மொழி நாள் பிப்பிரவரி 21ஆம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பேரா மாநிலத்தில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் அனைத்துலகத் தாய்மொழி நாள் விழா வெகுச் சிறப்பாக நடந்தது.
2018இல் பேரா மாநிலத்தில் முதன் முறையாக 35 தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி விழா கொண்டாடப்பட்டது.
2019இல் எண்பது பள்ளிகளில் இவ்விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த 2020இல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து நூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இவ்விழா நடந்துள்ளது. பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி விழா மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் தமிழ்மொழி உணர்வோடும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது.
மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, ஈப்போ |
பள்ளிகள் தோறும் தமிழ் சார்ந்த படைப்புகள், நாடகம், நடனம், காணொலிப் படைப்பு, தமிழறிஞர் மாறுவேடம், தமிழ்க்கோலம், சிறப்புரை எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் பண்பாட்டு உடையில் கலந்துகொள்வது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.
மேலும், தாய்மொழி நாள் விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு சிறப்பு செய்யப்படுகின்றனர். இந்தத் தாய்மொழி நாளில் முன்னாள் ஆசிரியர்களை மதித்துப் போற்றும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. முன்னாள் மற்றும் மூத்த ஆசிரியர்களுக்கு இந்த நாளில் பேராக் மாநிலத்தில் அங்கீகாரம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர் உள்ளங்களில் தாய்மொழி மீதான பற்றுதலை ஏற்படுத்துவதற்கு இவ்விழா மிகவும் உதவுகிறது. மேலும், தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு, தமிழ்ச் சான்றோர்கள் பற்றியெல்லாம் மாணவர்கள் அறிந்துகொள்ளவும் உணர்ந்து பார்க்கவும் இந்தத் தாய்மொழி நாள் விழா வழிவகுத்துள்ளது. அதனால், பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் தோறும் இவ்விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தாய்மொழி விழாவினை தமிழ் உணர்வோடும் எழுச்சியோடும் கொண்டாடிய தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் சுப.சற்குணன் தமது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தாய்மொழி நாள் விழா காணொலிகள்:-
Comments
Post a Comment