SJK(TAMIL) TUN SAMBANTHAN,BIDOR - உருமாற்றுப் பள்ளிக் கண்காட்சியில் முத்திரை பதித்தது
பேரா மாநில நிலையில் நடைபெற்ற உருமாற்றுப் பள்ளிக் கருத்தரங்கம் 2018இல் (Kolokium Sekolah Transformasi TS25) கலந்துகொண்ட ஒரே தமிழ்ப்பள்ளி என்ற பெருமையைப் பீடோர், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி பெற்றுள்ளது.
கடந்த எப்பிரல் 18 & 19 ஆகிய இரண்டு நாட்களுக்குப் பேராவிலுள்ள ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தில் (IPG Kampus Ipoh) மாநில நிலையிலான உருமாற்றுப் பள்ளிக் கருத்தரங்கமும் கண்காட்சியும் வெகு கோலாகலமாக நடந்தது. பேரா மாநிலத்தில் செயல்படும் உருமாற்றுப் பள்ளிகள் தங்கள் கண்காட்சிக் கூடங்களை அமைத்து உருமாற்றுக் கற்றல் தொடர்பான ஆக்கங்களையும் பாடத் துணைப் பொருள்களையும் 21ஆம் நூற்றாண்டு கற்றல் முறைகளையும் காட்சிப்படுத்தினர்.
இந்தச் சிறப்புமிகு கண்காட்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ்ப்பள்ளி என்ற பெருமையை பீடோர், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி பெற்றுள்ளது. இப்பள்ளி கடந்த மூன்று ஆண்டுகளாக உருமாற்றுப் பள்ளித் திட்டத்தில் பங்கேற்றுவரும் முன்னோடிப் பள்ளியாகத் திகழ்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பேரா மாநில 1.0, 2.0, 3.0 ஆகிய மூன்று காலக்கட்ட உருமாற்றுப் பள்ளித் திட்டங்களில் இடம்பெற்றுள்ள அனைத்துத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
தேசிய கல்வித் துணை இயக்குனர் ஹஜி சைனால் பின் அசான், பேரா மாநிலக் கல்வி இயக்குனர் டத்தோ மாட் லாசிம் இட்ரிஸ் இருவரும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு துன் சம்பந்தன் கண்காட்சிக் கூடத்திற்கு வருகை தந்து மாணவர்களின் திறனையும் படைப்பையும் நேரில் கண்டு பாராடினர். மாணவர்கள் மிகச் சிறந்த முறையில் தங்களின் காட்சிப் பொருள்கள் பற்றி விளக்கிக் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன், மாணவர்களின் படைப்பாற்றலை வெகுவாகப் பாராடினார். மாணவர்கள் உருவாக்கிய பாடத் துணைப் பொருள்களும் அவற்றைப் பற்றி மாணவர்கள் அளித்த விளக்கங்களும் மிகச் சிறப்பாக இருப்பதைப் பாராட்டி அவர்களுக்கும் மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் அன்பளிப்பு வழங்கிச் சிறப்பித்தார்.
பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி பேரா மாநிலத்தில் மிகச் சிறந்த ஒரு தமிழ்ப்பள்ளியாகப் பெயர் பொறித்துள்ளது. கடந்த 2017இல் இதே போன்று கேமரன் மலையில் நடந்த தேசிய நிலைக் கண்காட்சியில் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி கலந்துகொண்டு தமது முத்திரையைப் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி சிறப்புப் பெற்ற பள்ளியாகவும் முன்மாதிரி தமிழ்ப்பள்ளியாகவும் வெற்றிபெற்றதற்கு முழுக் காரணியாகத் திகழ்பவர் பள்ளியின் தலைமையாசிரியர் பழனி சுப்பையா. தம்முடைய துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெ.ஆ.சங்கம், பள்ளி வாரியக் குழு, மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து ஒரே இலக்கில் பயணித்து இந்த வெற்றியை ஈட்டியுள்ள பழனி சுப்பையா மிகவும் பாராட்டுக்குரியவர் என்றால் மிகையல்ல.
Comments
Post a Comment