பீடோர், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளிக்கு 30 கல்வி அதிகாரிகள் வருகை
பேரா, பீடோரில் அமைந்துள்ள துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மிகச் சிறந்த உருமாற்றுப் பள்ளியாகவும் (Sekolah Transformasi) பேரா மாநிலத்தில் சிறந்த ஒரு முன்னுவமிப் பள்ளியாகவும் (Sekolah Contoh) உருவாகி வருகின்றது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 03-04-2018ஆம் நாளன்று பத்தாங் பாடாங், முவாலிம் (Daerah Batang Padang & Muallim) ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 30 கல்வி அதிகாரிகள் இப்பள்ளிக்குச் சிறப்பு வருகை மேற்கொண்டனர்.
பள்ளியின் செயலாக்கம், பள்ளியில் நடைபெற்றுள்ள உருமாற்றம், பள்ளி நிருவாகத்தின் மேலாண்மை, வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் ஆகியவற்றை வந்திருந்த அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மேலும் துன் சம்பந்தன் பள்ளியின் மிகச் சிறந்த அடைவுநிலை மீதான கலந்துரையாடலும் நடைபெற்றது.
பேரா மாநிலத்தில் உள்ள பிறமொழிப் பள்ளிகளுக்கும் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி முன்மாதிரியாக உருவாகி இருக்கின்றது என்பதை அண்மையக் காலமாக இப்பள்ளிக்குப் பல பள்ளிகளும் அதிகாரிகளும் படையெடுத்து வருகை மேற்கொள்வதிலிருந்து நன்கு அறிய முடிகின்றது..
ஒரு தமிழ்ப்பள்ளி இவ்வாறு மிகச் சிறந்த முன்னுவமிப் பள்ளியாக உருவாகி இருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும். அதற்காக, இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் பழனி சுப்பையா அவர்களையும் பள்ளியின் துணைத் தலைமையாசிரியர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டலாம்.
தலைமையாசிரியர் பழனி சுப்பையா |
தமிழ்ப்பள்ளிகள் நாளுக்கு நாள் தரமுயர்ந்து வருகின்றன என்பதற்குப் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.
Comments
Post a Comment