கிரியான் தமிழ்ப்பள்ளிகளின் திடல்தடப் போட்டி
28.04.2018 சனிக்கிழமையன்று
கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான திடல்தடப் போட்டி 2018 சிறப்புற நடந்தேறியது.
நிபோங் திபால், திரான்ஸ் கிரியானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத் திடலில்
இப்போட்டி நடந்தது.
கிரியான் மாவட்டத்
தலைமையாசிரியர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியில் 14 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த
158 மாணவர்களும் 80 ஆசிரியர்களும் உள்பட ஏறக்குறைய 300 பேர் கலந்துகொண்டனர்.
கிரியான் மாவட்டக்
கல்வி அதிகாரி துவான் ஹஜி அப்துல் வாஹிட் பின் ரம்லி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு
இப்போட்டியை அதிகாரப்படியாகத் திறந்து வைத்தார். அவர்தம் உரையில், இந்தப் போட்டியை வெகுச் சிறப்பாக
ஏற்பாடு செய்த தலைமையாசிரியர் மன்றத்தையும் அதன் தலைவர் ஆர்.பி.ஜெயகோபாலனையும் பாராட்டினார்.
மேலும், தமிழ்ப்பள்ளிகள் சிறந்த முறையில் முயற்சி மேற்கொண்டு நிகழ்ச்சிகளை
நடத்துவது பெருமையளிப்பதாகக் கூறினார்.
நிறைவு விழாவில் கலந்துகொண்ட
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன், பேரா மாநிலத்தில்
தமிழ்ப்பள்ளிகளுக்கிடையில் திடல்தடப் போட்டியை நடத்திய முதல் மாவட்டம் கிரியான் தான்
எனப் புகழாரம் சூட்டினார். மேலும், பல மாவட்டங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விளையாட்டுத்
துறையில் சிறந்த சாதனைகள் படைத்து வருவதைச் சுட்டிக்காட்டினார். மாணவர்களைப் பயிற்றுவிக்கும்
ஆசிரியர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
அதிகமான தங்கப் பதக்கம்
வென்று செயிண்மேரி தமிழ்ப்பள்ளி வெற்றிக்குழுவுக்கான சுழற்கிண்ணத்தை வென்றது. முன்னாள்
தலைமையாசிரியர் எஸ்.ஓ.அப்பன், கிரியான் மாவட்ட இந்து சங்கத் தலைவர் முருகன், சமயப் பகுதித் தலைவர்
துரைசாமி ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார்கள்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின்
விளையாட்டு ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் நடைபெற்ற இந்தத் திடல்தடப் போட்டியில்
வெற்றிபெற்ற மாணவர்கள் மாநில நிலைப் போட்டியில் கலந்துகொள்வார்கள்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையிலான
திடல்தடப் போட்டிக்குக் கல்வி அமைச்சு அங்கீகாரம் கொடுத்து தேசிய நிலைப் போட்டியை நடத்துகின்றது
என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment