SJK(TAMIL) LDG.BULUH AKAR - மீண்டும் ஓர் அனைத்துலகச் சாதனை

பேராவில் அடிக்கடி மாபெரும் சாதனை செய்வதில் பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது. தற்போது மீண்டுமொரு முறை அனைத்துலக நிலையில் சாதனை செய்துள்ளது.

அனைத்துலகப் பொறியியல் ஆக்கமும் புத்தாக்கமும் கண்காட்சி 2018 (International Engineering Invention & Innovation Exhibition) எனும் போட்டியில் கலந்துகொண்டு பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.

சோழ உமி, கரும்புச் சக்கை, வாழைத்தண்டு முதலான தாவரங்களைக் கொண்டு பசுமைக் காகிதத்தை உருவாக்கி இந்தக் குழுவினர் மாபெரும் சாதனையைப் புரிந்துள்ளனர்.

பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த அஜய் ராவ் சந்திரன், குகன்ராஜ் கிருஷ்ணகுமார், சூரியமூர்த்தி சிவம் ஆகிய மூவரே இந்த மாபெரும் சாதனைக்குரிய மாணவர்களாவர். உலக அளவிலான வெற்றியை நோக்கி இந்த மாணவர்களைப் பயிற்றுவித்து வழிநடத்தியவர்கள் ஆசிரியை அனுராதா முருகேசன், ஆசிரியை நிர்மலா முருகேசன் ஆகிய இருவர்.



மலேசியப் பெர்லிஸ் பல்கலைக்கழகத்தில் (Universiti Malaysia Perlis) கடந்த ஏப்பிரல் 13 -15 வரை இந்த அனைத்துலகப் போட்டி நடைபெற்றது. மொத்தம் 410 குழுக்கள் இதில் பங்குபெற்றன.

மலேசியாவைத் தவிர்த்து அமெரிக்கா, இந்தியா,, ரோமானியா, தென் கொரியா, சீனா, வியட்நாம், வாவோஸ், இந்தோனிசியா, தாய்லாந்து, கம்போடியா முதலான 18 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். அனைத்துக் குழுக்களும் தங்களின் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளைக் காட்சிக் வைத்தனர்.

தொடக்கப் பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் வரையில் பங்கேற்ற இப்போட்டியில் பேரா மாநிலத்திலிருந்து கலந்துகொண்ட ஒரே பள்ளி பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மட்டும்தான். அதேபோல, கெடா மாநிலத்திலிருந்து சுங்கை உலார் தமிழ்ப்பள்ளியும் இதில் பங்கெடுத்தது.


பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் புத்தாக்கக் கண்டுபிடிப்புக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இந்தச் சாதனையை அறிந்த பேரா மாநிலக் கல்வி இயக்குனர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், நடுபேரா மாவட்டத் கல்வித் துணையதிகாரி பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளிக்கு நேரடியாக வருகை மேற்கொண்டு சாதனை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் தமது வாழ்த்துகளைப் பள்ளித் தலைமையாசிரியரிடம் தெரிவித்தார்.



கடந்த 2017ஆம் ஆண்டில் இந்தோனிசியா, சுராபாயாவில் நடைபெற்ற அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி முதல்பரிசை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

சரியான வழிகாட்டலும் முறையான பயிற்சியும் இருந்தால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக நிலையில் திறமையை வெளிப்படுத்திச் சாதிப்பார்கள் என்பதற்கு இந்த வெற்றி மிகச் சிறந்த சான்றாகும். 

Comments

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி