முகமை அமைப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்குப் பிரியாவிடை
மலேசியக் கல்வி அமைச்சில், தமிழ்ப்பள்ளிகளுக்கான முகமை அமைப்பாளராகப் பணியாற்றி அண்மையில் பணி ஓய்வு பெற்ற சு.பாஸ்கரன் அவர்களுக்குப் பேரா மாநில அளவில் பிரியாவிடை நல்கப்பட்டது.
கடந்த 24.05.2018 வியாழக்கிழமை, ஈப்போ எக்செல்சியர் தங்கும் விடுதியில் அவருக்குப் பாராட்டு நிகழ்ச்சி சிறப்புடன் நிகழ்ந்தது.
கடந்த 40 ஆண்டுகளாக கல்வித்துறையில் ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும், பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளராகவும் பின்னர் ஓய்வு பெறும் முன்னர் மலேசியக் கல்வி அமைச்சில் தமிழ்ப்பள்ளிகளுக்கான முகமை அமைப்பாளராகப் பணியாற்றி தம்முடைய அறுபதாவது வயதில் அவர் பணி ஓய்வு பெற்றார்.
நல்ல தமிழுணர்வும் தமிழ் உள்ளமும் கொண்ட சு.பாஸ்கரன் கல்வி அமைச்சில் மட்டும் 12 ஆண்டுகள் பணியற்றியுள்ளார். தம்முடைய பணிக்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிலும் தமிழ்மொழி வளர்ச்சியிலும் தனிக்கவனமும் அக்கறையும் காட்டியவர்.
கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது இயக்கங்கள், தலைவர்கள் என எல்லாத் தரப்பினரிடமும் சுமுகமான உறவைப் பாராட்டி அன்புடன் பழகியவர் இவர். மேலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும் அனைவரிடமும் பணிவோடு பழகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலாகப் பேரா மாநிலத்தில் தம்முடைய ஆசிரியர் பணியைத் தொடங்கிய இவர் இறுதியாகப் பங்கேற்ற அதிகாரப்படியான நிகழ்ச்சியும் பேராவிலேயே நடந்தது. 19.05.2018ஆம் நாள் ஈப்போவில் நடந்த மாணவர் முழக்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தம்முடைய பணியை நிறைவு செய்துகொண்டார்.
இவருடைய 40 ஆண்டுகால கல்விப் பணியையும் தமிழ்ச் சேவையையும் பாராட்டும் வகையில் இந்தப் பிரியாவிடை நிகழ்ச்சி அமைந்திருந்தது.
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் ந.பத்மநாதன் பாஸ்கரன் அவர்களுக்குப் பொன்னாடையும் மாலையும் அணிவித்துச் சிறப்புச் செய்ததோடு நினைவுப் பரிசையும் வழங்கிச் சிறப்பு செய்தார்.
அதேபோல, பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி இந்நாள் அமைப்பாளர் சுப.சற்குணனும், முன்னாள் அமைப்பாளர் ந.மனோகரனும் பொன்னாடை, மாலை அணிவித்து அன்பளிப்பு வழங்கினர்.
பின்னர், பேரா மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களின் தலைமையாசிரியர்கள் சார்பில் மாவட்டத் தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர்கள் நினைவுப் பரிசு வழங்கி நன்றிப் பாராட்டினர்.
இறுதியாக, ஏற்புரையாற்றிய சு.பாஸ்கரன் இந்தச் சிறப்பினை வழங்கிய பேரா மாநிலத் தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், தமிழ்ப்பள்ளிகள் கல்வி தருகின்ற இடங்கள் மட்டுமல்ல. தமிழ்மொழி உணர்வையும் பண்பாட்டு உணர்வையும் வளர்க்கும் இடங்கள். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பணியாற்ற வேண்டும். எந்தச் சூழலிலும் தமிழ்ப்பள்ளிகளை நாம் விட்டுக்கொடுக்கக் கூடாது. தமிழ்பள்ளிகள் தற்போது சிறப்பாக முன்னேறி வருகின்றன. ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் சிறந்த நிலையை அடைய வேண்டும். அதற்கேற்ற பணிகளைத் தலைமையாசிரியர்கள் முனைப்புடன் செய்வதோடு சிறந்த நிருவாகத் திறமையைக் கடைபிடிக்க வேண்டும் என்றாரவர்.
அதோடு, பணி ஓய்வு என்பது அரசாங்கப் பணிக்குத்தானே தவிர, தம்முடைய தமிழ்ப்பணிக்கு அல்ல எனக் கரவொலிக்கு நடுவே அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment