SJK(T) PERAK SANGGETHA SABAH & SJK(T) LDG.BATAK RABIT - மாணவர் முழக்கம் 2021இல் பேரா மாநிலத்திற்கு இரட்டை வெற்றி
மாணவர் முழக்கம் 2021 மாபெரும் இறுதிச் சுற்றில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதல் இடத்தையும் இரண்டாம் பரிசையும் வாகை சூடி இரட்டை வெற்றியைக் கண்டுள்ளனர்.
23.10.2021ஆம் நாள் நடந்த மாபெரும் இறுதிச் சுற்றில், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவன் ஜோனஸ் அபிசியா எட்வின் முதல் நிலையில் வெற்றிபெற்றார். இந்த மாபெரும் வெற்றியின் மூலம் முதல் பரிசான RM1000.00 (ஆயிரம் வெள்ளி) தொகையும் நற்சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. நான் கல்வி அமைச்சரானால் கலைப் பாடத்தைக் கட்டாயமாக்குவேன் எனும் தலைப்பில் திறம்பட பேசியதோடு, பொதுமக்கள் மற்றும் நடுவர்களின் வினாக்களுக்கு இலாவகமாக மறுமொழி பேசி ஜோனஸ் அபிசியா முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.
தவிர, பொது மக்களின் வாக்குகளின் அடிப்படையில் மக்கள் தேர்வு பேச்சாளருக்கான சிறப்புப் பரிசையும் ஜோனஸ் அபிசியா வெற்றி கொண்டார். இதற்காக RM250.00 (இருநூற்று ஐம்பது வெள்ளி) பரிசாக வழங்கப்பட்டது.
பேரா, பினாங்கு, ஜொகூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 4 போட்டியாளர்கள் மாபெரும் இறுதிச் சுற்றில் களம் இறங்கினர். அவர்களுள் பேராவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், முதலாவது மற்றும் இரண்டாம் பரிசுகளை வாகை சூடியுள்ள செய்தி பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாணவன் ஜோனஸ் அபிசியா மற்றும் மாணவி தர்சினி குமரன் இருவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
இந்தச் சாதனை மாணவர்களை உருவாக்கிய பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மற்றும் தெலுக் இந்தான் பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் திருமதி சந்திரிகா அப்பு மற்றும் திரு.ஆறுமுகம் வேலு ஆகிய இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். மாணவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் வீட்டில் ஊக்கமூட்டி உதவிய பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
‘வெள்ளி மாநிலம்; வெற்றி மாநிலம்’ என்ற முழக்கத்தைத் தேசிய நிலையில் பறைசாற்றியுள்ள இந்த இரண்டு சாதனை மாணவர்களும் தொடர்ந்து நடைபெறவுள்ள அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டிக்குத் தகுதிபெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு பேரா மாநிலம் காத்திருக்கிறது
Comments
Post a Comment