KARNIVAL BAHASA MELAYU SJK(C) & SJK(T) - தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மகத்தான சாதனை
பேரா மாநில நிலையில் நடைபெற்று முடிந்த தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கான மலாய்மொழிப் போட்டிகளில் அனைத்துப் பிரிவிலும் முதல் இடத்தைப் பெற்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டியில் தனியாள் நாடகம், பேச்சுப் போட்டி, மலாய் எழுத்துப் போட்டி என மூன்று வகையான போட்டிகள் நடைபெற்றன. இம்மூன்றிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வென்றுள்ளனர். தனியாள் நாடகப் போட்டியில் மலாய்மொழியில் கதைக்கூறி தெலுக் இந்தான் பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி தெய்வான்ஷா திருஞானசுந்தர் முதல் பரிசை வென்றார். மலாய்மொழிப் பேச்சுப் போட்டியில் தெலுக் இந்தான் நடேசப் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவி சாருமதி திருச்செல்வன் முதல் இடத்தை வெற்றி கண்டார். மலாய் எழுத்துப் போட்டியில் ஊத்தான் மெலிந்தாங் பாரதி தமிழ்ப்பள்ளி மாணவி ரோஷிமி பன்னீர்செல்வம் முதலாவது நிலையில் வெற்றி பெற்றார்.
மூன்று போட்டிகளிலும் தமிழ்ப்பள்ளி மானவர்களே வெற்றி கண்டிருப்பது இந்தத் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கான மலாய்மொழிப் போட்டி வரலாற்றில் மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. காரணம், சீனப்பள்ளி மாணவர்களின் ஆதிக்கமே அதிகமான இருக்கும் இதில் இம்முறை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மகத்தான வெற்றிபெற்றுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், தேசிய நிலைக்குத் தகுதி பெற்றுள்ள போட்டியாளர்கள் அனைவருமே தமிழ்ப்பள்ளி மாணவர்கள் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். தேசிய நிலைப் போட்டி எதிர்வரும் அக்டோபர் 25 – 27 வரை திரங்கானு மாநிலக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
பேரா மாநிலத்தின் நிகராளிகளாக பேச்சுப் போட்டிக்கு தெலுக் இந்தான் நடேசப் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவி சாருமதி திருச்செல்வன் தேர்வு பெற்றுள்ளார். மலாய்மொழி மொழி எழுத்துப் போட்டியில் கலந்துகொள்ள லுமுட், முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி மாணவன் வருனேஷ் தேவராஜு, சிம்மோர், கிளேபாங் தமிழ்ப்பள்ளி மாணவி தனிஷா ரெட்டி சரவணன் மற்றும் சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஶ்ரீ திரிஷ்னமித்ரா தேவராஜா ஆகிய மூவர் தேர்வு பெற்றுள்ளனர்.
மாநில நிலையில் ஆறு முறை நடந்த தகுதி தேர்வுகளில் 10 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றதன் காரணமாக இம்மூன்று மாணவர்கள் தேசிய நிலைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரா மாநிலத்தின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 185 சீனப்பள்ளி மற்றும் 134 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 1400 மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். மாவட்ட நிலையில் நடந்த பிறகு தற்போது மாநில நிலை போட்டிகள் முடிந்த நிலையில் போட்டியின் முடிவுகள் அக்டோபர் 7ஆம் நாள் அதிகாரப்படியாக அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டின் போட்டிகள் அனைத்தும் இயங்கலை மூலமாகவே நடந்து முடிந்தன. நிறைவு விழாவும் இயங்கலையில் நடந்த வேளையில் பேரா மாநில முதல்வர் டத்தோ சரானி முகமட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வெற்றியும் சாதனையும் தொர்ந்து சிறப்பாக மிளிர்கின்றது. இதற்காகப் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பாராட்ட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தலும் மாணவர் உருவாக்கமும் சிறப்பாக நடக்கின்றன என்பதை மாணவர்களின் சிறப்பான வெற்றிகள் எடுத்துக் காட்டுவதாக பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் சுப.சற்குணன் தெரிவித்தார். மேலும் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் வீட்டில் உதவிய பெற்றோர்களுக்கும் தமது பாராட்டைத் தெரிவித்தார். தேசிய நிலைக்குச் செல்லும் மாணவர்கள் சிறந்த வெற்றியை ஈட்டுவதற்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பேரா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இந்த மாபெரும் சாதனை தமிழ்ப்பள்ளிகளுக்குப் பெருமை சேர்த்துள்ளது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆற்றலும் திறமையும் வெளிப்படையாகத் தெரிவதாகவும் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பான வளர்ச்சியும் மேம்பாடும் மகிழ்ச்சியைத் தருவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மக்கள் ஓசை 13.10.2021 |
மலேசிய நண்பன் 10.10.2021 |
Comments
Post a Comment