UPSR 2019 தேர்வை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்

04.09.2019 தொடங்கி 12.09.2019 வரை ஆறாம் ஆண்டு மாணவருக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு நடைபெறவுள்ளது. பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த நமது மாணவச் செல்வங்கள் இந்தத் தேர்வுக்காக அமரவுள்ளனர். நமது மாணவர்கள் அனைவரும் நனிச்சிறந்த முறையில் இந்தத் தேர்வினை எழுதுவதற்கும் எதிர் கொள்வதற்கும் நமது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்போம். மாணவரோடு சேர்ந்து நாம் அனைவரும் யூ.பி.எஸ்.ஆர் 2019 தேர்வை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம் 


கடந்த 6 ஆண்டுகளாக இந்த மாணவர்கள் நமது தமிழ்ப்பள்ளிகளில் நன்முறையில் கல்வி பயின்று வந்தவர்கள். குறிப்பாக, இவ்வாண்டில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வினைக் குறியாகக் கொண்டு கண்ணும் கருத்துமாகப் பாடங்களைப் படித்தவர்கள்; பயிற்சிகள் செய்தவர்கள்; அயராத முயற்சியில் இடையறாமல் உழைத்தவர்கள்.

இந்த மாணவர்களின் கடுமையான உழைப்புக்கும் முயற்சிக்கும் நல்லதொரு பலன் கிடைக்க வேண்டுவோம். இளமை வயதின் மனமகிழ்வுகள் அனைத்தையும் கடந்த 9 மாதங்களாகத் தியாகம் செய்திருக்கும் நமது மாணவர்களின் ஈகத்திற்கு எல்லாம் வல்ல இறைமை இனியதொரு வெற்றியை நல்கிட இறைஞ்சுவோம்.


நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவரும் சிறப்புத் தேர்ச்சி பெறவும் சிறந்த அடைவை பெறவும் மனதார அவர்களை வாழ்த்துவோம்; அன்போடு நல்லாசி வழங்குவோம்.

அதேவேளையில், நமது மாணவர்களைத் தேர்வுக்காகப் பயிற்றுவித்த நல்லாசிரியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி மொழிவோம். ஆறாம் ஆண்டுக்குப் பாடமெடுத்த ஆசிரியர்களின் அரும்பணியைப் போற்றுவோம். தொழில் என்பதைத் தாண்டி; கடமை என்பதைக் கடந்து ஆறாமாண்டு ஆசிரியர் என்னும் பொறுப்பை உண்மை உள்ளத்தோடு ஆற்றியிருக்கும் அவர்களின் அறப்பணிகளுக்கு நன்றிப் பாராட்டுவோம். ஆசிரியர்களின் வழிகாட்டலில் மாணவர்கள் தேர்ச்சி பெறட்டும். ஆசிரியர்களின் வலுக்கூட்டலில் மாணவர்களின் வெற்றி நிறையட்டும்.

மாணவர்களின் நலன்கருதி பல்வேறு திட்டங்கள் வகுத்து திறம்பட நிருவகித்த தலைமையாசிரியர்கள், துணைத் தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் நனிநன்றி மொழிவோம்.


பள்ளியின் முயற்சிகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் எப்பொழுதும் துணையாக இருக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், பொது இயக்கங்கள், ஆலயங்கள், தன்னார்வலர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி செலுத்துவோம்.

நமது மாணவர்களின் வாழ்வில் மிக முக்கியமானவர்களாக விளங்கும் பெற்றோர்களின் அர்ப்பணிப்பையும் மாணவர்களுக்கு அவர்கள் தொடர்ந்து வழங்கிவந்த அரவணைப்பையும் நன்றியோடு நினைத்துப் பார்ப்போம்.

தவிர, பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆதரவாக இருப்பதுடன் தேவையான உதவிகளை வழங்கி நமது  தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில்  அக்கறை  கொண்டு செயல்படும் நமது தலைவர்களுக்கும் நன்றி சொல்வது நமது கடமையாகும்.

2019இல் நமது மாணவர்களின் தேர்ச்சி உயர எல்லாம் வல்ல இறைமைத் திருவருளை நம்பிக்கையோடு வேண்டுவோம்.


வெள்ளி மாநிலம்வெற்றி மாநிலம்

அன்புடன்;
சுப.சற்குணன்

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர்
04.09.2019

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

FIND THE DIFFERENCE - வித்தியாசம் கண்டுபிடி விளையாட்டு