SJK(T) LADANG ALLAGAR - தலைமை ஆசிரியருக்குத் தமிழ்நாட்டில் சிறப்பு விருது
பேரா மாநிலம், லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி,புனிதா
சுப்பிரமணியம் அவர்களுக்குத் தமிழ் நாட்டில் ‘ஆசிரியர் செம்மல் விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
Guru Besar SJK(T) Ladang Allagar, Daerah Larut Matang dan Selama menerima Anugerah Tokoh Guru di Chennai, Tamil Nadu, India sempena Hari Guru Negara India pada 05.09.2019. |
இந்தியாவில் ஆசிரியர் நாள் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் ஆசிரியர் நாள் விழா நடத்துவது வழக்கம். 2019 ஆண்டு விழாவில் மலேசியாவைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மூவருக்கு ’ஆசிரியர் செம்மல்’ விருது வழங்கப்பட்டது. தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் இவர்களைத் தேர்ந்தெடுத்தது.
அந்த வகையில், பேரா மாநிலத்தில்
உள்ள அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி,புனிதா
சுப்பிரமணியம் இவ்விருதைப் பெற்றுள்ளார். 05.09.2019ஆம் நாள், சென்னையில் உள்ள மேனாள் அதிபர் டாக்டர்
எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்ந்த இல்லத்தில் ஆசிரியர் செம்மல் விருதும், சான்றிதழும் பணி நிறைவு பெற்ற நீதியரசர்
ஆ.மாணிக்கவாசகன் வழங்கினார்.
தலைமையாசிரியர் திருமதி.புனிதா சுப்பிரமணியம் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி
தற்போது தலைமையாசிரியராக இருக்கின்றார். தமிழாசிரியருக்கான பட்டயக் கல்விப் பயிற்சியும்
கணிதத் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றவர். அதோடு, கல்வி நிருவாகத் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். தமிழ்ப்பள்ளி
மாணவர்களுக்கான பாடப் பயிற்றிகள், நூல்கள் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டவர். தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, இலக்கியப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன்
செயல்பட்டு வருகின்றார். மேலும், பல உள்நாட்டு, அனைத்துலக மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளும் படைத்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இவருடன் பினாங்கு, வால்டோர்
தமிழ்ப்பள்ளி ஆசிரியர் கவிதா வீரமுத்து மற்றும் சிலாங்கூர், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்
நிர்மலாதேவி பன்னீர்செல்வம் ஆகிய மேலும் இருவருக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட
இந்த விருது மலேசியத் தமிழாசிரியர்கள் அனைவருக்கும் ஓர் அங்கீகாரமாகவும் பெருமை சேர்ப்பதாகவும்
அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
Comments
Post a Comment