SJK(T) LADANG KATI - மறக்கப்பட்ட தமிழர் உணவுமுறை அறிமுக நிகழ்ச்சி
SJK(T) Ladang Kati, Kuala Kangsar, Perak menganjurkan pameran Masakan & Makanan Tradisional Tamil
கோரணி பெருந்தொற்றினால் கடந்த ஆறு மாதங்களாக இல்லிருப்புக் கற்றலை மேற்கொண்ட மாணவர்கள், 22ஆம் திகதி நவம்பர் மாதத்திலிருந்து தங்களின் இயல்பான பள்ளி வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். இவ்வேளையில் மாணவர்களுக்குக் கற்றலின்பால் ஆர்வத்தைத் தூண்டவும் கற்பிக்கும் திறன்களைக் கைவரப்பெறவும் கல்வி அமைச்சு பல்வகை கற்றல் அணுகுமுறைகளை வலியுறுத்தி வருகின்றது. அவ்வணுகுமுறைகளுள் ஒன்றான செயல்முறைக் கற்றல் மாணவர்கள் உய்த்துணர்ந்து ஒன்றைக் கற்கவும் நாடிக்கற்றலைத் தூண்டவும் வழிவகுக்கும் மிகச் சிறந்த அணுகுமுறையாகும்.
இந்தச் செயல்முறை கற்றலை எவ்வாறு நனிச்சிறப்பாக மாணவரிடம் கொண்டு சேர்க்கலாம் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக, அண்மையில் கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நடவடிக்கை அமைந்திருந்தது. ஆசிரியை குமாரி தனலட்சுமி குப்புசாமி அவர்களின் வழிகாட்டலில் ஆண்டு 4, ஆண்டு 5 மற்றும் ஆண்டு 6 மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்தில் தமிழர்களால் மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட பாரம்பரிய உணவுகள் எனும் கருப்பொருளோடு தானியங்களையொட்டிய கண்காட்சி ஒன்று நடைபெற்றது.
வரகு, கேழ்வரகு, சாமை, சம்பா, தினை, கம்பு, குதிரைவாலி, சோளம், கடலை, எள் போன்ற 16 வகையான தானியங்களையும் அவற்றால் சமைக்கப்பட்ட கம்பு அதிரசம், சம்பா பொங்கல், கேழ்வரகு அடை, குதிரைவாலி கிச்சடி, சாமை உப்புமா, வரகு இட்டிலி என 23 வகை உணவுகளும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. கண்காட்சிக்கு வருகையளித்த இதர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தானியங்களின் அறிமுகம், பயன்கள் சமைக்கும் முறைகள் ஆகியவற்றையொட்டி விளக்கமளித்ததோடு உணவுகளும் பரிமாறப்பட்டன.
மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தானியங்களையொட்டிய குறிப்புகளையும் படங்களையும் மண்பாண்டங்களில் தானிய வகைகளையும் அத்தானியங்களைக் கொண்டு சமைக்கப்பட்ட உணவுகளையும் தத்தம் நடுவத்தில் காட்சிக்கு வைத்தனர்.
இக்கண்காட்சியில் மிகச்சிறப்பாகத் தனது படைப்பினைப் படைத்த மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இது போன்ற ஆக்ககரமான கற்றல் அணுகுமுறைக்கு உந்துசக்தியாக விளங்கும் கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி வை.சிவகாமி அவர்களுக்கும் இச்செயல்முறை கற்றல் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய பள்ளியின் அனைத்து ஆசிரியர் பெருமக்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வலுவான தூண்களாக விளங்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.முருகன் மற்றும் பள்ளி மேலாளர் வாரியக் குழுத் தலைவர் திரு வீ.சின்னராஜூ பி.பி.என் அவர்களுக்கும் தமிழ்மொழி பாட ஆசிரியைத் தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளி அமைதியாகப் பல சிறந்த சாதனைகளைச் செய்து வருகின்ற பள்ளியாகும். தோட்டப்புற பள்ளியாக இருந்த போதிலும் தரமான மாணவர்களை உருவாக்கிவரும் இத்தமிழ்ப்பள்ளிக்கு அடுத்த ஆண்டில் 5 மாணவர்கள் மட்டுமே முதலாம் ஆண்டிற்குப் பதிந்துள்ளனர்.
எனவே, அருகாண்மையிலுள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இப்பள்ளியில் பதிந்து கொள்ள அன்புடன் வரவேற்கப்படுகின்றனர். முதலாம் ஆண்டில் பதியும் மாணவர்களுக்குச் சீருடை முதல் பள்ளி உபகரண பொருள்கள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
Comments
Post a Comment