அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி
18.12.2021 ஆம் நாள் அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டியில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் இரட்டை வெற்றியைக் கண்டு மலேசியப் போட்டியாளர்கள் மாபெரும் சாதனை படைத்தனர்.
வணக்கம் மலேசியா நிறுவனம் மற்றும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்வளர் மையமும் இணைந்து 7ஆவது ஆண்டாக நடத்திய அனைத்துலக மாணவர் முழக்கம் இறுதிப் போட்டி இயங்கலை வாயிலாக நடைபெற்றது. மலேசியாவைச் சேர்ந்த 2 போட்டியாளர், இலங்கையிலிருந்து ஒருவர், டென்மார்க் நாட்டிலிருந்து ஒருவர் என 4 பேர் இறுதிப் போட்டியில் களமிறங்கினர்.
அமைதியான உலகம் வேண்டும். அதற்கு என் உடனடி ஆணை வேண்டாம் ஆயுதம், வேண்டாம் கைப்பேசி, வேண்டாம் மது, வேண்டாம் நகரமயம் எனும் 4 நிலைப்பாடுகளில் ஒவ்வொரு போட்டியாளரும் பேசினர்.
வேண்டாம் ஆயுதம் என்று பேசிய மலேசியாவில் தர்சினி குமரன் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றார். மேலும் பேரா, தெலுக் இந்தான், பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவியான இவர் மக்கள் பேச்சாளருக்கான விருதையும் இவர் தட்டிச் சென்றார்.
மூன்றாம் நிலைக்குரிய இரண்டு பரிசுகளை முறையே டென்மார்க்கைச் சேர்ந்த பிரனீத் கிருபாகரன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த லக்சியா இரமேஷ்குமார் இருவரும் வென்றனர்.
மாணவன் ஜோனஸ் அபிசியா எட்வின் மலேசிய நிலை மாணவர் முழக்கத்தில் முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவருடன் மாணவி தர்சினி குமரனும் அனைத்துலக மாணவர் முழக்கத் தேர்வுச் சுற்றில் வெற்றிபெற்று முன்னேறினார்கள்.
தற்போது மாபெரும் வெற்றிகளைப் பதிவு செய்து மலேசியாவுக்கு மட்டுமின்றி பேரா மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களின் இந்த இரட்டை வெற்றியைக் கண்டு பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் உற்சாகம் அடைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது எனலாம்.
தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைத்துல நிலைப் போட்டிகளில் மாபெரும் சாதனைகளைச் செய்து வருவது தமிழ்ப்பள்ளிகளின் மீது பொதுமக்களின் பார்வையைத் திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துலக நிலையில் இரட்டை வெற்றியைப் பதிவுசெய்துள்ள ஜோனஸ் அபிசியா எட்வின் மற்றும் தர்சினி குமரன் இருவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் குவிந்து கொண்டிருக்கின்றன. அவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் அவர்களின் தலைமையாசிரியர்களுக்கும் பாராட்டுகள்.
இந்த வெற்றியைப் பற்றி கூறுகையில், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பாக உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கு இந்த அனைத்துக நிலை வெற்றி நல்லதொரு சான்று. தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களின் வழிகாட்டலும் ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மாணவர் உருவாக்கப் பணிகளும் மிகச் சிறப்புடன் நடைபெறுகின்றன. ஆகவே, தமிழ்ப்பள்ளிகள் மேல் பெற்றோர்கள் உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும். தமிழ்ப்பள்ளிகளே பெற்றோர்களின் முதல் தேர்வாக இருக்க வேண்டும் என்று பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் உதவி இயக்குநர் சுப.சற்குணன் தெரிவித்தார்.
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழகத் தலைவர் அர்ச்சுணன் முனியாண்டி மற்றும் மலாயாத் தமிழாசிரியர் சங்கத்தின் பேரா மாநிலத் தலைவர் பழனி சுப்பையா இருவரும் சாதனை மாணவர்களுக்கும் அவர்களின் தமிழ்ப்பள்ளிக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
Comments
Post a Comment