அனைத்துலக மாணவர் முழக்கம் இறுதிச் சுற்றுக்கு மலேசியா (பேரா), இலங்கை மற்றும் டென்மார்க் தேர்வு
வணக்கம் மலேசியாவின் ஏற்பாட்டில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ் வளர் மையத்தின் இணை ஆதரவில் நடைபெறும் அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மலேசியா, இலங்கை, டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வாகினர். இவர்களுள் மலேசியாவின் நிகராளிகள் இருவர். அந்த இருவருமே பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவர், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவர் ஜோனஸ் அபிசியா எட்வின். மற்றொரு மாணவி பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தர்சினி குமரன். இவர்கள் இருவரும் தங்களின் பள்ளிக்கு மட்டுமின்றி பேரா மாநிலத்திற்கும் மலேசிய நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்றால் மிகையாகாது.
இந்தச் சாதனை மாணவர்கள் இருவருக்கும் அவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
வெள்ளி மாநிலம் வெற்றி மாநிலம் என்ற முழக்கத்திற்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ள செல்வன் ஜோனஸ் அபிசியா மற்றும் செல்வி தர்சினி குமரன் இருவரும் அனைத்துலக மாணவர் முழக்கம் இறுதிப் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துவோம்.
Comments
Post a Comment