மாவட்ட நிலை சதுரங்கப் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மகத்தான சாதனை
பேரா மாநில விளையாட்டு மன்றம் [MAJLIS SUKAN SEKOLAH-SEKOLAH NEGERI PERAK] 2021ஆம் ஆண்டுக்கான மாவட்ட நிலை சதுரங்கப் போட்டியை நடத்தியது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக இவ்வாண்டுக்கான சதுரங்கப் போட்டி இயங்கலை முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பேரா மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களையும் சேர்ந்த மலாய், சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளோடு இடைநிலைப் பள்ளிகளும் இப்போட்டியில் கலந்துகொண்டன.
பாகான் டத்தோ மாவட்டப் போட்டியில், 12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள்
பிரிவிலும் பெண்கள் பிரிவிலும் அதிரடியான வெற்றியைப் பதிவுசெய்து பாரதி தமிழ்ப்பள்ளி
மகத்தான சாதனை படைத்துள்ளது.
12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 10 இடங்களில் முதல் 3 பரிசுகள் உள்பட 6 பரிசுகளை வென்று பாரதி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவரையும் திக்கு முக்காட வைத்துள்ளனர். முதல் பரிசு, 2ஆவது, 3 ஆவது, 7ஆவது, 8ஆவது மற்றும் 10ஆவது ஆகிய 6 பரிசுகளை ஒருசேர வென்றுள்ளனர்.
அதோடு நில்லாமல், 12 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் 10 இடங்களில் முதல் 2 பரிசுகள் உள்பட 5 பரிசுகளை வென்று பாரதி தமிழ்ப்பள்ளி மாணவிகள் அசத்தியுள்ளனர் என்பது மற்றொரு சாதனையாகும். முதல் பரிசு, 2ஆவது, 4ஆவது, 8ஆவது மற்றும் 10ஆவது பரிசுகளை இவர்கள் வாகை சூடியுள்ளனர்.
பாரதி தமிழ்ப்பள்ளியின் இந்த மாபெரும் சாதனையானது பாகான் டத்தோ மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் பார்வையையும் தம் பக்கம் திருப்பியுள்ளது என்றால் மிகையாகாது.
பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கோபால் அவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் பாரதி தமிழ்ப்பள்ளியின் சாதனை மாணவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
மஞ்சோங் மாவட்டத்தில் ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி, 12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் பரிசை வென்றுள்ளது. அதோடு, 12 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் மகா கணேசா தமிழ்ப்பள்ளி முதல் பரிசினை வாகை சூடியது. பெங்காலான் பாரு தமிழ்ப்பள்ளி 2ஆவது பரிசினை மற்றும் 3ஆவது பரிசுகளை வென்றது. மேலும் 4ஆவது, 6ஆவது, 7ஆவது மற்றும் 10ஆவது ஆகிய பரிசுகளையும் தமிழ்ப்பள்ளிகளே வென்று முத்திரைப் பதித்துள்ளன.
வடகிந்தா மாவட்டத்தில் செட்டியார் தமிழ்ப்பள்ளி, 12 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் 2ஆவது பரிசை வென்றுள்ளது.
தென்கிந்தா மாவட்டத்தில் கொப்பேங் தமிழ்ப்பள்ளி, 12 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் 3ஆவது பரிசை வென்றுள்ளது.
லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தில் சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி, 12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 3ஆவது பரிசை வென்றுள்ளது.
கீழ்ப்பேரா மாவட்டத்தில் பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 12 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் முதல் பரிசையும் 3ஆவது பரிசையும் வாகைசூடி சாதனை பொறித்துள்ளது. மேலும், சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, 12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 3ஆவது பரிசை வென்றுள்ளது.
வெற்றிகளைப் பதிவு செய்துள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் சாதனை மாணவர்களுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த பொறுப்பாசிரியர்களுக்கும் முக்கியமான வழிகாட்டி வழிநடத்திய தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
Comments
Post a Comment