யூ.பி.எஸ்.ஆர் தேர்வு 2018 - நல்வாழ்த்தும் நனிநன்றியும்

20.09.2018 தொடங்கி 27.09.2018 வரை ஆறாம் ஆண்டு மாணவருக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு நடைபெறவுள்ளது. பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த நமது மாணவச் செல்வங்கள் இந்தத் தேர்வுக்காக அமரவுள்ளனர். நமது மாணவர்கள் அனைவரும் நனிச்சிறந்த முறையில் இந்தத் தேர்வினை எழுதுவதற்கும் எதிர் கொள்வதற்கும் நமது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்போம். கடந்த 6 ஆண்டுகளாக இந்த மாணவர்கள் நமது தமிழ்ப்பள்ளிகளில் நன்முறையில் கல்வி பயின்று வந்தவர்கள். குறிப்பாக , இவ்வாண்டில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வினைக் குறியாகக் கொண்டு கண்ணும் கருத்துமாகப் பாடங்களைப் படித்தவர்கள் ; பயிற்சிகள் செய்தவர்கள் ; அயராத முயற்சியில் இடையறாமல் உழைத்தவர்கள். இந்த மாணவர்களின் கடுமையான உழைப்புக்கும் முயற்சிக்கும் நல்லதொரு பலன் கிடைக்க வேண்டுவோம். இளமை வயதின் மனமகிழ்வுகள் அனைத்தையும் கடந்த 9 மாதங்களாகத் தியாகம் செய்திருக்கும் நமது மாணவர்களின் ஈகத்திற்கு எல்லாம் வல்ல இறைமை இனியதொரு வெற்றியை நல்கிட இறைஞ்சுவோம். நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவரும் சிறப்புத் தேர்ச்சி பெறவும் சிறந்த அடைவை பெறவும் மனதார அவர்களை வாழ்த்துவோம் ; அன்ப...